பரமக்குடி பரளை கால்வாயில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனை
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து பரளை கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வைகை ஆற்றில் தொடர்ந்து 20 நாட்களாக மழை நீர் வரத்து உள்ளது. இதன்படி ஆற்றில் 2000 கன அடி மற்றும் வலது, இடது பிரதான கால்வாய்களில் குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் வைகையில் வந்த கூடுதல் தண்ணீர் பார்த்திபனுார் மதகை அடைந்தது.
அப்போது வைகை ஆறு உட்பட வலது, இடது பிரதான கால்வாய்களில் 500 முதல் 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பொழிவு இருந்தாலும், பரமக்குடி உட்பட அபிராமம், பார்த்திபனுார் ஆகிய பகுதிகளில் மழை இல்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் பொய்த்துள்ளது.
இதுகுறித்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது:
பார்த்திபனுார் மதகில் இருந்து பரளை கால்வாய்க்கு தண்ணீர் திறந்து முதுகுளத்துார், கமுதி, கடலாடி, சாயல்குடி மற்றும் பார்த்திபனுார் பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல வேண்டும். அக்.18ல் நடந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கால்வாய்களில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் மழை பொழிவு காலங்களில் ஆற்றில் உள்ள அனைத்து ஷட்டர்களும் திறந்து இருக்க வேண்டும் என்பது விதி. தற்போது ராமநாதபுரம் பெரிய கண்மாயை தண்ணீர் அடைந்த நிலையில் உபரி நீர் கடலில் கலக்கிறது.
எனவே வெள்ள நீரை பரளை கால்வாயில் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.