மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைப்பு

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

திருவாடானை உட்கோட்டத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் பருவமழையால் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்தது. ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

சேதமடைந்த இடங்களை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து திருவாடானை உதவி கோட்டபொறியாளர் கீதா கூறியதாவது:

முதல் கட்டமாக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் அஞ்சுகோட்டை, எல்.கே.நகர், வெள்ளையபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சீரமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் பயணம் செய்யலாம்.

இது தவிர மழையால் சேதமடைந்த சாலைகள் ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதியில் சீரமைக்கப்படும். மழையால் தண்ணீர் தேங்காத வகையில் பாலம் மற்றும் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement