பரமக்குடி வைகை ஆற்றை கடந்து செல்லும் மழை நீரால் மகிழ்ச்சி
கழிவு நீர் கலப்பதால் குளிக்க தயங்கும் மக்கள்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்று நீரை நம்பி உள்ள சூழலில் கழிவு நீர் கலப்பதால் குளிக்க முடியாத நிலையில் மக்கள் வேதனை அடையும் நிலை உள்ளது.
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து வரும் நீர், ராமநாதபுரம் மாவட்டம் பெரிய கண்மாய் வரை செல்கிறது. இதன்படி நேரடியாக கடலில் கலக்காத ஆறாக வைகை உள்ளது. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைப்பொழிவு இல்லாத சூழலிலும், வைகை ஆற்றில் மழை நீர் கடந்து செல்வதால் ரம்யமாக காட்சியளிக்கிறது.
வைகை அணைக்கு முல்லைப் பெரியாறு, வருஷநாடு மூல வைகை ஆறுகள் மூலம் நீர்வரத்து கிடைக்கிறது. அணையில் 71 அடி வரை நீரை தேக்கும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு என ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறப்பது வழக்கம். இச்சூழலில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவ்வப்போது ஆற்றில் தண்ணீர் செல்கிறது.
இதனால் கரையோரங்களில் ஊற்று நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கும் தண்ணீர் விடப்படுகிறது.
தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஜீவாதாரமாக இருக்கும் வைகை ஆறு உட்பட கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதால் பொதுமக்கள், விவசாயிகள் வேதனைக்குள்ளாகி உள்ளனர். இதனால் வைகை நீரில் இறங்கி குளிக்க முடியாத சூழலில் மக்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
ஆகவே நீர்நிலைகளை பாதுகாத்து மக்களின் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.