கத்தியால் குத்தி மகன் கொலை பாசக்கார தந்தை கைது
வேப்பூர்: வேப்பூர் அருகே பெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்,70; இவரது மகன் முத்துசாமி,47. கொத்தனார் வேலை செய்து வந்தார். தந்தை, மகன் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் வழக்கம் போல் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில், ஆறுமுகம் கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்த தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து மரத்தடியில் உட்கார்ந்து கொண்டார்.
சற்று நேரம் கழித்து அங்கு வந்த முத்துசாமியை, ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
முத்துசாமின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் கிடந்த முத்துசாமியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.