புதுச்சேரியில் நாளை முதல் 2 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் தகவல்
புதுச்சேரி: மாநில முழுவதும் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளில் நாளையும், நாளைமறுநாளும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கின்றது.
இது குறித்து புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 01.01.2025 அன்று தகுதிபெரும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுவதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த 29ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 28 ம் தேதி வரை தொடர்ந்து நடக்கின்றது.
மேலும் 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 ஆகிய தகுதி பெறும் தேதிகளில் 18 வயது பூர்த்தி ஆகயுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் திருத்தம், அதாவது, பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், புகைப்படம், பெயர் நீக்கம், திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
பொதுமக்கள் வசதிக்காக நாளை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் நடக்க உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக மேலும் ஒரு சிறப்பு முகாம் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல், திருத்தங்களை செய்ய விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ளவும், நீக்கவும் voter helpline app, nvsp.in, voters.eci.in ஆகியே சேவைகள் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.