கல்விக்கடனை நேர்மறையாக அணுகவேண்டும்: மாநகராட்சி கமிஷனர் மாணவர்களுக்கு அறிவுரை
கோவை ; 'பொருளாதாரம் இல்லை என்ற காரணத்தால் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கில் கல்விக்கடன் செயல்படுத்தப்படுகிறது. இதனை நேர்மறையான எண்ணங்களுடன் அணுகவேண்டும்' என மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் பேசினார்.
மாணவர்களுக்கான கல்விக்கடன் முகாம், மாவட்ட நிர்வாகம் சார்பில் வங்கிகளுடன் ஒருங்கிணைந்து நேற்று பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியில் நடத்தப்பட்டது. முன் விண்ணப்பித்த, 8 மாணவர்களுக்கு 85.89 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
மேலும், வங்கிக்கடன் சார்ந்த பல்வேறு சந்தேகங்களுக்கு அதிகாரிகள் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விளக்கமளித்தனர்.
இதில், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், '' என்னை போன்று பலர் கல்விக்கடன் வாயிலாகவே படித்து முன்னேறியுள்ளோம். பொருளாதாரம் இல்லை என்ற காரணத்தால் கல்வி எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது என்ற உயரிய நோக்கில் கல்விக்கடன் செயல்படுத்தப்படுகிறது.
கல்விக்கடனை தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணம் இல்லாமல், படித்து முன்னேறி நானே கட்டுவேன் என்ற நேர்மறையான எண்ணத்துடன் அணுகவேண்டும். உங்களை போன்று பல மாணவர்கள் இதனை நம்பிதான் எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்பதை உணரவேண்டும். நன்றாக படித்து சரியான வேலை வாங்கிவிட்டால், இந்த கடனை ஓராண்டுகளிலேயே அடைத்துவிட முடியும்,'' என்றார்.
இதில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் பிரகாசம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜீதேந்திரன், கனரா வங்கி துணை மேலாளர் காஞ்சனா ஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.