முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு; 3 வது முறையாக கோர்ட் மாற்றம்

கோவை ; முன்னாள் அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை, மூன்றாவது முறையாக வேறு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

கோவை, சிங்காநல்லுாரில் வசித்து வருபவர் பொங்கலுார் பழனிச்சாமி.2006- 2011 ல், தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 44 லட்சம் ரூபாய்க்கு சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில், 2012ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், சென்னையிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது.

அங்கிருந்து இந்த வழக்கு, 2019, ஜூலையில், மீண்டும் கோவைக்கு மாற்றப்பட்டு, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணை நடந்தது. கடந்தாண்டில் சாட்சி விசாரணை, இரு தரப்பு வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஏழாண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் வழக்குகளை, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டிலிருந்து, சப்- கோர்ட்டிற்கு மாற்றுவதற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, முன் னாள் அமைச்சர் பழனிச்சாமி மீதான சொத்து குவிப்பு வழக்கு, கோவை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு, கோர்ட் விட்டு கோர்ட் மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement