தாறுமாறாக விமர்சித்த சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்; காரணம் என்ன; கமென்ட் செய்யுங்க வாசகர்களே!
சென்னை: 'நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய்' என்று சொன்ன சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், விஜய் கட்சி துவங்குவதாக கூறியதும், அவரை பலவாறாக பாராட்டி சீமான் பேசினார். கடந்த செப்., 27ல் நடந்த த.வெ.க., முதல் மாநில மாநாட்டில் பேசிய விஜய், 'திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது கட்சி கொள்கையாக இருக்கும்' என்றார். அது மட்டுமின்றி, 'ஆ ஊ என்று சத்தமா கோபமா பேசி விட்டால் போதுமா' என்றும் கிண்டல் தொனியில் விஜய் பேசியிருந்தார். சீமானை மட்டம் தட்டும் வகையில் விஜய் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன.
சாம்பாரா? கருவாட்டு குழம்பா?
இதையடுத்து விஜய் பற்றி சீமான் தாறுமாறாக விமர்சனம் செய்தார். சீமான் கூறியதாவது: 'திராவிடமும் தமிழ் தேசியமும் வேறு வேறு. விஜய் கொள்கை எங்கள் நிலைப்பாட்டுக்கு எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்றல்ல. சாம்பார் என்றால் சாம்பார் என சொல்ல வேண்டும்; கருவாட்டு குழம்பு என்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். இரண்டையும் சேர்த்து, கருவாட்டு சாம்பார் என்று சொல்லக் கூடாது.
அடிபட்டு செத்து விடுவாய்!
காட்டுப்பூனையும், நாட்டு கோழியும் ஒன்றா? திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்பது கொள்கை அல்ல; அது, அழுகிய கூமுட்டை. சாலையில் ஏதாவது ஒரு பக்கம் நிற்கவேண்டும்; நடுவில் நின்றால் லாரி அடித்து இறந்துவிடுவாய். நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். எதிர் புரட்சி என்பது முட்டுக்கு முட்டு, வெட்டுக்கு வெட்டு என்பது தான் எங்களின் கதை. தம்பி நான் பேசுறது பஞ்ச் டயலாக் அல்ல தம்பி, நெஞ்சு டயலாக். வேலு நாச்சியார் படத்தை வைத்துவிட்டால் போதுமா?
நயன்தாராவை பார்க்க கூட்டம்
விஜயுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார். என்னிலும் முதிர்ந்தவர். அனுபவமும், அரசியல் அறிவும் பெற்றவர் திருமாவளவன். அவருடைய மாணவர்கள் தான் நாங்கள். நானே இவ்வளவு நிதானமாக இருக்கும் போது, எங்கள் அண்ணன் எவ்வளவு ஆழமா சிந்திப்பார் என்று உங்களுக்கு தெரியும். எனக்கு பாடம் நடத்திய ஆசிரியர் அந்த தப்பை பண்ண மாட்டாரு. உறுதியாக சொல்ல முடியும். கூட்டத்தை வைத்து எதுவும் கணக்கு போடக் கூடாது. நயன்தாராவை பார்க்க 4 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்திற்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியிருக்கிறது? இவ்வாறு சீமான் பேசினார்.
'ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி; நான் எப்பவும் ஆதரிப்பேன்; அவர் என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் ஆதரிப்பேன்' என்று கட்சி ஆரம்பிப்பதாக கூறியபோது விஜய்-ஐ ஆதரித்த சீமான், கட்சி ஆரம்பித்த நிலையில் வேறு மாதிரியாக பேசினார். 'எதிரி எதிரிதான். தம்பியும் கிடையாது, அண்ணணும் கிடையாது' என சீமான் கூறினார். இதை வைத்து இரு கட்சியினரும் ஆன்லைனில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிறந்தநாள் வாழ்த்து
இந்த நிலையில் விஜய் இன்று சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில், 'நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர், சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.
சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது, அரசியல் நாகரிகமா? எதிர்கால முதலீடா? என நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். நீங்களும் உங்கள் கருத்தை கமென்ட் செய்து சொல்லுங்கள் வாசகர்களே!