உயரம் குறைந்த சப்வே அமைக்க எதிர்ப்பு: நான்கு வழிச்சாலை பணிகள் நிறுத்தம்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே உயரம் குறைந்த சப்வே அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர்
விழுப்புரம்- நாகை இடையே ரூ 7 ஆயிரம் கோடி மதிப்பில் 180 கிமீ தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தென்னாலகுடி- வைத்தீஸ்வரன்கோவில் இடையே செல்லும் கிராம சாலையின் குறுக்கே நான்கு வழிச்சாலைக்கான உயரம் குறைவான சப்வே அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் அறுவடை இயந்திரங்கள், விவசாய பயன்பாட்டிற்கான வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் அதன் உயரத்தை கூட்டி மேல்மட்ட பாலமாக அமைத்து தர அப்பகுதி மக்கள் தாசில்தார் முதல் கலெக்டர் வரை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இன்று நான்கு வழி சாலை பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த நகாய் மற்றும் எஸ்பிஎல் நிறுவன அதிகாரிகள் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.