பாதுகாப்பு வீரர்களுக்கு சமோசாவா? விசாரணைக்கு உத்தரவிட்ட ஹிமாச்சல் அரசு; பா.ஜ., கிண்டல்

1


தரம்சாலா: ஹிமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு சமோசாக்களை வழங்கியது தொடர்பாக சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்ட சம்பவம் அரங்கேறியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.


கடந்த அக்., 21ம் தேதி சி.ஐ.டி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு சென்றுள்ளார். அங்கு முதல்வரின் வருகையையொட்டி, அவருக்கு வழங்குவதற்காக, பிரபல நட்சத்திர ஓட்டலில் இருந்து 4 பெட்டிகளில் சமோசாக்கள் மற்றும் கேக்குகள் வாங்கப்பட்டுள்ளன.


இந்த சமோசாக்கள் முதல்வரின் பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ஹிமாச்சல பிரதேச அரசு, சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டது. அரசின் இந்த செயல் விமர்சனங்களுக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது.


இது தொடர்பாக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் ரந்த்வீர் சர்மா கூறுகையில், "முதல்வரின் சமோசா குறித்து காங்கிரஸ் கவலைப்படுகிறது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றி அந்தக் கட்சியினருக்கு அக்கறை இல்லை," என்று கூறினார். இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேச அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement