பழங்குடியினரின் நிலத்தை பறிக்க பா.ஜ., முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

8

சிம்தேகா: '' பழங்குடியினரின் நிலம், வனம், நாட்டின் வளங்களை பறித்து கோடீஸ்வரர்களிடம் கொடுக்க பா.ஜ., திட்டமிடுகிறது,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிம்தேகா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டை 90 சதவீத மக்கள் வழி நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், பிரதமர் மோடி, அமித் ஷா, அம்பானி, அதானி மட்டுமே வழிநடத்த வேண்டும் என பா.ஜ., விரும்புகிறது.
உங்களின் நிலம், வனம் மற்றும் நாட்டின் வளம் உள்ளிட்ட அனைத்தையும் பறித்து கோடீஸ்வரர்களிடம் கொடுக்கவும் அக்கட்சி விரும்புகிறது.

25 கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஆனால், அவர்களில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஒருவர் கூட இல்லை.விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என நான் சொல்லும் போது, அவர்களின் பழக்கத்தை ராகுல் கெடுக்கிறார் என சொல்கிறார்கள். ஆனால், கோடீஸ்வரர்களின் கடனை நீங்கள் தள்ளுபடி செய்தால், அவர்களின் பழக்கம் கெடாதா?

பா.ஜ., செல்லும் இடங்களில் எல்லாம், மத ரீதியிலும், ஜாதி ரீதியிலும், மொழி ரீதியிலும் மோதலை ஏற்படுத்துகின்றனர். அனைத்து இடங்களிலும் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இதுவரை சென்றது இல்லை. இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement