பிரியங்காவுக்கு பிரிவினைவாத அமைப்பு ஆதரவு: கேரள முதல்வர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் : “ஜமாத் - -இ - -இஸ்லாமி அமைப்பின் ஆதரவுடன், வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார்,” என, கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதிக்கு, வரும் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது; 23ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இத்தொகுதியில், காங்., சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
மும்முனை போட்டி
இவரை எதிர்த்து மார்க்.கம்யூ., கட்சியின் சத்யன் மொகேரி, பா.ஜ.,வின் நவ்யா ஹரிதாஸ் களமிறங்குகின்றனர். இதனால், வயநாடு இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மார்க்.கம்யூ., மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
ஜமாத் - -இ - -இஸ்லாமி ஆதரவுடன், வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார்.
இதில் காங்., நிலைப்பாடு என்ன? ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிராக, அந்த அமைப்பின் சித்தாந்தம் உள்ளது. இது அனைவரும் அறிந்ததே. ஜமாத் அமைப்பினருக்கு ஒரே ஒரு கொள்கை தான். ஜனநாயக முறையிலான அரசை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அதுதான் அவர்களின் சித்தாந்தம்.
ஜமாத் - -இ - -இஸ்லாமி அமைப்பின் ஆதரவை பெற்றுள்ளதன் வாயிலாக, மதச்சார்பின்மை என்ற காங்கிரசின் முகமூடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், பா.ஜ.,வுடன் சேர்ந்து, ஜமாத் - -இ - -இஸ்லாமி அமைப்பு சதி வேலைகளை செய்தது. இதற்கு, சமீபத்தில் அங்கு நடந்த சட்டசபை தேர்தல் சாட்சி.
மார்க்.கம்யூ., வேட்பாளர் முகமது யூசுப் தாரிகாமியை தோற்கடிப்பதில், ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பு கவனம் செலுத்தியது; எனினும் அவர் வென்றார்.
ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்புடன், காங்., கூட்டணி வைத்துள்ளது. இதற்காக அக்கட்சி சில தியாகங்களை செய்துள்ளது.
எதிர்க்க வேண்டாமா?
மதச்சார்பின்மைக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், அனைத்து விதமான மதவெறியையும் எதிர்க்க வேண்டாமா? ஜமாத் -- இ - -இஸ்லாமியின் ஓட்டுகள் வேண்டாம் என காங்கிரசால் சொல்ல முடியுமா?இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, ஜமாத் - இ - இஸ்லாமி காஷ்மீரி அமைப்புக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.