அருணாசலேஸ்வரர் கோவிலில் மஹாரத தேர் வெள்ளோட்டம்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா பிரம்மோற்சவம், 17 நாட்கள் நடக்கும். ஏழாம் நாள் விழாவில், 59 அடி உயரம், 200 டன் எடை கொண்ட உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வீதி உலா வரும் மஹாரதம் தேர், கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தற்போது மஹாரதத்தின் உறுதித்தன்மை குறைந்ததால், அதை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் சார்பில், 70 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
புதுப்பிக்கும் பணி, ஒரு மாதத்துக்கு மேலாக நடந்தது. அலங்கார துாண்கள் மற்றும் பலகைகள், நான்கு கொடுங்கை நிலை, குத்துக்கால்கள் புதுப்பிக்கப்பட்டன.
203 புதிய சிலைகள் பொருத்தப்பட்டு, மஹாரதம் முழுதும் பஞ்ச வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், டிச., 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு, 10ம் தேதி மஹாரத தேரோட்டம் நடக்க உள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட மஹாரத தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வடத்தை பிடித்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்று சுவாமியை வழிபட்டனர்.