நான் உங்களுக்கு உதவலாமா? நோயாளிக்கு வழிகாட்ட முயற்சி
திருப்பூர்; ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடி வரும் நோயாளிகளுக்கு உரிய முறையில் வழிகாட்ட, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயிலில், 'நான் உங்களுக்கு உதவ லாமா?' என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும், என பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தரப்பில் இருந்து, மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து சுகாதார நிலையங்களிலும், தொடர் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதிக்கப்படுகிறது. உள்நோயாளிகளுக்கு கர்ப்பகால முன் கவனிப்பு, பிரசவம், தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் சிகிச்சை முறை உதவி வருகிறது.
பிறவிக்குறைபாடு, ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்டவை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வப்போது மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மிக அருகிலேயே வசிப்பவர்களுக்கு கூட முழுமையான விபரங்கள் தெரிவதில்லை. புதியதாக வருவோர் தடுமாறினர்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடி வருவோருக்கு முழுமையான வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்பதற்காக, ஆரம்ப சுகாதார நிலைய நுழைவு வாயில்களில், 'நான் உங்களுக்கு உதவலாமா' அறிவிப்பு பலகை வைத்து, மையம் அமைத்து, ஒருவர் வழிகாட்ட, உதவ, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.