சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயில் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ ஊற்று

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்திலிருந்து அபூர்வ நீருற்று ஏற்பட்டதால் அப்பகுதி பக்தர்கள் ஆர்வமாக அந்நீரை பருகி வழிபாடு நடத்தினர்.

இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் சிவலிங்கத்திற்கு அடியில் அபூர்வ நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக தண்ணீர் வெளியேற துவங்கியது. அந்த நீர் சிவலிங்கத்தை சுற்றி 2 அடி வரை தேங்கியது.

அப்பகுதி பக்தர்கள் அந்நீர் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை போக்குவதாக நம்புகின்றனர். இந்நிலையில் நேற்றும் சிவலிங்கத்தின் வழியாக நீர் வடிய துவங்கியது. சன்னதி முழுவதும் அந்த நீர் தேங்கியது. கோயில் நிர்வாகத்தினர் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி தேங்கிய நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். ஏராளமான பக்தர்களும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

Advertisement