வைகை ஆற்றில் தொடர்ந்து செல்லும் தண்ணீர் மானாமதுரையில் உயர்ந்தது நிலத்தடி நீர்மட்டம்

மானாமதுரை : வைகை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் செல்வதால் மானாமதுரையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக செல்லும் வைகை ஆறு பல ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளித்தும்,500க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் வழங்கிய பிறகு கடலில் கலக்கிறது.

கடந்த ஒரு மாதமாக மதுரை,திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததை தொடர்ந்து வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

மதுரைக்கு அருகே உள்ள விரகனூர் மதகணையிலிருந்து பார்த்திபனுார் மதகணை வரை சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன விவசாயத்திற்கு கடந்த ஒரு மாதமாக கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மதுரை, அருப்புக்கோட்டை,சாயல்குடி, திருப்புவனம் உள்ளிட்ட 172க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் தடையின்றி கிடைத்து வருகிறது.

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் தினம்தோறும் வழங்கப்படுகிறது.

ஆற்றில் தற்போது ஒரு மாதமாக தண்ணீர் செல்வதால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் நன்கு உயர்ந்துள்ளது.

Advertisement