கஸ்பா ஏரியில் மண்டியுள்ள செடிகள்... அகற்றப்படுமா? விருத்தாசலம் விவசாயிகள் கோரிக்கை
விருத்தாசலம்: விருத்தாசலம் கஸ்பா ஏரியில் மண்டியுள்ள ஆகாயதாமரை, நெய்வேலி காட்டாமணி செடிகளை அகற்றி துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் கஸ்பா ஏரி, 278 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு மேமாத்துார் அணைக்கட்டு நீர் ஆதாரமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழையின் போது, மணிமுக்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மே மாத்துார் அணைக்கட்டில் உள்ள பாசன வாய்க்கால் மூலம் கஸ்பா ஏரி நிரப்பப்படும்.
கஸ்பா ஏரி பாசனம் மூலம், விருத்தாசலம் பகுதியில் 584 ஏக்கர், ஆலிச்சிக்குடியில் 508 ஏக்கர் என, 1,000 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு, இந்த ஏரியின் நடுவே விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் சிலர் ஏரியின் கரையை ஆக்கிரமித்து வீடு கட்டி வசிக்கின்றனர். மேலும், சிலர் ஆக்கிரமித்து விவசாய நிலங்களாக மாற்றி பயிர் செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக ஏரி துார் வாராததால், ஆகாயதாமரை, நெய்வேலி காட்டாமணி, வேலிகாத்தன் செடி, கருவேல மரங்கள் ஏரியை ஆக்கிரமித்துள்ளதால், ஏரியின் ஆழம் குறைந்து நீர்பிடிப்பு பகுதியின் அளவும் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் சம்பா பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, சம்பா நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, விருத்தாசலம், ஆலிச்சிக்குடி பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிர்களை காப்பாற்ற, கஸ்பா ஏரியில் மண்டியுள்ள நெய்வேலி கட்டாமணி செடி, ஆகாயதாமரை செடிகளை அகற்றி, ஏரியை துார்வாரிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ஆலிச்சிக்குடி விவசாயி ஒருவர் கூறுகையில், கஸ்பா ஏரியின் மூலம் நெல் சாகுபடி செய்து வருகிறேன். ஏரியில் கலக்கும் கழிவுநீர் மற்றும் ஆகாயதாமரை போன்ற செடிகளால், ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளது.
இதனால், தோல் அரிப்பு போன்ற நோய்களால் விவசாயிகள் அவதியடைகிறோம்.
எனவே, கழிவுநீர் ஏரியாக மாறியுள்ள கஸ்பா ஏரியை துார்வாரி, சுத்தம் செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.