சாலையில் தேங்கிய மழைநீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் திருவாலங்காடு அமைந்துள்ளது.
இங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை, பி.டி.ஓ., அலுவலகம் காவல் நிலையம், அரசு பள்ளி, வேளாண் அலுவலகம் செல்வோர் என, தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இச்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நான்குமுனை சந்திப்பில், சாதாரண மழை பெய்தாலே தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும், சாலையில் மழைநீர் தேங்குவதால், ஒருபக்க சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, மழைநீர் தேங்கும் நெடுஞ்சாலையை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.