பல் மருத்துவரிடம் பண மோசடி;  ஏஜன்ட் மீது வழக்கு 

கோவை ; திருப்பூரை சேர்ந்த பல் மருத்துவரிடம் ரூ. 69 லட்சம் மோசடி செய்த கோவை ஏஜன்ட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர், திரு.வி.கே., நகர் 4வது வீதியை சேர்ந்தவர் பல் மருத்துவர் கிஷோர் குமார், 45. இவர் திருப்பூர், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பல் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை திறக்க திட்டமிட்டிருந்தார். வங்கியில் கடன் பெறுவதற்காக, கோவையை சேர்ந்த ஏஜன்ட் சக்திவேலை அணுகினார்.

அவரும், 1 ரூபாய் வட்டிக்கு ரூ. 15 கோடி வரை தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், கடன் பெற்றுத்தர கமிஷன் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர், சக்திவேல் கேட்கும் போதெல்லாம், கிஷோர் குமார் கோவை ராமநாத புரம் பகுதிக்கு வந்து கமிஷன் தொகையை கொடுத்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு டிச., மாதம் முதல் ஆக., 2024 வரை சுமார், ரூ. 60 லட்சத்து 75 ஆயிரம் பணத்தைசக்திவேலுக்கு கொடுத்துள்ளார்.

பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் கடன் ஏற்பாடு செய்து தரவில்லை. இதனால், தான் கொடுத்த பணத்தை கிஷோர் திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது, சக்திவேல் பணத்தை கொடுக்க மறுத்ததோடு, கிஷோரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, கிஷோர் குமார் கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement