புட்லுார் ரயில் நிலைய தேவைகள் பட்டியலிட்டு பயணியர் கோரிக்கை

திருவள்ளூர்:புட்லுார் ரயில் நிலையத்தில் நடைமேம்பால கூரை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவையை பட்டியலிட்டு, ரயில்வே துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - திருவள்ளூர் மார்க்கத்தில், புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. காக்களூர் தொழிற்பேட்டை, புட்லுார் அம்மன் கோவிலுக்கு தொழிலாளர்கள், பக்தர்கள் மற்றும் பயணியர் என, தினமும் 30,000 பேர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு, ரயில் பயணியர் சங்கத்தினர் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பட்டியலிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் விவரம்:

புட்லுார் ரயில் நிலைய நடைமேம்பாலம் உயரமாக இருப்பதால் கர்ப்பிணியர், ஊனமுற்றோர், முதியோர் நலன் கருதி 'லிப்ட்' அமைக்க வேண்டும். நடைமேம்பாலத்தில் ஒரு பகுதியில் கூரை இல்லை. மழை காலத்திற்குள் கூரை அமைக்க வேண்டும்.

மின்சார விரைவு ரயில்கள் நின்று செல்ல நான்காவது நடைமேடை அவசியம். குடிநீர், கழிப்பறை வசதி, ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்த மின்னணு தகவல் பலகை அமைக்க வேண்டும்.

மூன்று நடைமேடையிலும், நீண்ட கூரை அமைக்க வேண்டும். கணினி டிக்கெட் வழங்கும் மையம், விரைவு ரயில்கள் முன்பதிவு மையம் மற்றும் 'சிசிடிவி' கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement