டாக்டர் சுப்பையா கொலையில் அனைவரும் விடுதலை எப்படி? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
புதுடில்லி:சென்னையில், 2013ல் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கலான மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
அனைவரையும் விடுதலை செய்தது ஆச்சரியம் அளிப்பதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த, பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சுப்பையா, 2013ல் கொலை செய்யப்பட்டார்.
சொத்து தகராறில் அவரை கொன்றதாக, அவருடைய உறவினரான பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், மகன்கள் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வில்லியம்ஸ், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசு ராஜன், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
துாக்கு தண்டனை
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், 2021ல், மேரி புஷ்பம் மற்றும் ஏசு ராஜனுக்கு ஆயுள் தண்டனையும், மற்ற ஏழு பேருக்கு துாக்கு தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன், 14ம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேலும், வேறு வழக்குகளில் தேவைப்படாத பட்சத்தில், இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தால், அதை திருப்பித் தர வேண்டும் என்றும் தெரிவித்தது.
செஷன்ஸ் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ததற்கு, உயர் நீதிமன்றம் சில முக்கிய காரணங்களை தீர்ப்பில் கூறியிருந்தது. அவை:
உயர் நீதிமன்றம் வகுத்தபடி, இந்த வழக்கில் அடையாள அணிவகுப்பு சோதனை நடத்தப்படவில்லை; மாஜிஸ்திரேட் பின்பற்றிய நடைமுறை தவறானது.
அடையாள அணிவகுப்பு
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை, மற்ற சிறைக் கைதிகள் உடன் கலந்து, அடையாள அணிவகுப்பை நடத்தியிருக்கக் கூடாது; ஒரே வயதான, அளவு, எடை, நிறம் மற்றும் உடல்வாகு உடைய சிறைக் கைதிகள் உடன் கலந்து, அடையாள அணிவகுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக அடையாள அணிவகுப்பை நடத்தியிருக்க வேண்டும்.
சம்பவம் நடந்த பின், இருவரது வாக்குமூலங்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டன. அந்த இருவரையும், வழக்கு விசாரணையின் போதும், விசாரித்திருக்க வேண்டும்.
அவர்களை மீண்டும் விசாரிக்காதது, அரசு தரப்பு வழக்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நியாயமான முறையில் புலன் விசாரணை நடக்கவில்லை என்பதை ஒதுக்கி விட முடியாது.
நேரடி சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்த இருவரது வாக்குமூலங்களை ஏற்க முடியவில்லை. சந்தேகத்துக்கு இடமின்றி வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. சாட்சியங்களை சரிவர பரிசீலிக்க, விசாரணை நீதிமன்றமும் தவறி விட்டது.
இவ்வாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும், டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி சுப்பையா சார்பிலும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுக்கள், நீதிபதிகள் பீலா எம். திவேதி, எஸ்.சி. சர்மா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
'பட்டப்பகலில் நடந்த கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஆச்சரியமளிக்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை' என, அமர்வு குறிப்பிட்டது.
மேல்முறையீட்டு மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.