சிவகாசி மாநகராட்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகள் அறிவிக்காததால் ஏமாற்றம்

சிவகாசி: முதல்வர் ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி அறிவிப்பில் சிவகாசி மாநகராட்சிக்கு ரோடு, மழை நீர் வடிகால் பணிகள் குறித்து அறிவிப்பு இல்லாததால் தொழில் துறையினர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிவகாசி நகராட்சி 2020 ல் நுாற்றாண்டு விழா கொண்டாடிய போது ரூ. 50 கோடி சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள், சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம், சாமிநத்தம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய முதல் நிலை ஊராட்சிகள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் படி சிவகாசி , திருத்தங்கல் நகராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டு 2021 அக். ல் மாநகராட்சியாக செயல்பாட்டுக்கு வந்தது. தொழில் நகரான சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் தொழிற்சாலைகளுக்கான விரிவான ரோடு, லாரி முனையம், சிப்காட் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என தொழில் துறையினரும், ரோடு, மழை நீர் வடிகால், குடிநீர், சுகாதார வளாகம், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என மக்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகளை கடந்த பின்னரும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதி இதுவரையிலும் ஒதுக்கீடு செய்யாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது 19.89 சதுர கிலோமீட்டர் பரப்பு உள்ள சிவகாசி மாநகராட்சியில் 2011 மக்கள் தொகை கணக்கின்படி 1.26 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 9 ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஜன. ல் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து அவை மாநகராட்சியுடன் இணைய உள்ளது. இதனால் நகரின் எல்லை 121.80 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, மக்கள் தொகை 2.70 லட்சமாக உயரும். இதனால் விரிவாக்கப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின் சிவகாசி மாநகராட்சிக்கு ரோடு, மழை நீர் வடிகால், லாரி முனையம், பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களை அறிவிப்பார் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சிவகாசியில் ரூ. 15 கோடியில் பல்நோக்கு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்த முதல்வர் உள் கட்டமைப்பு வசதி மேம்படுத்துவது குறித்து அறிவிக்காதது தொழில்துறையினர், மக்கள் மனதில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement