'கூகுள் மேப்'பால் நேர்ந்த விபரீதம்; பள்ளத்தில் கவிழ்ந்தது பஸ்; கேரளாவில் இருவர் உயிரிழந்த சோகம்!

9


திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் கண்ணனூரில் கூகுள் மேப் பார்த்து நாடக குழுவினர் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இருவர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமுற்றனர்.


கூகுள் மேப் பார்த்து வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் அடிக்கடி நேர்ந்து வருகிறது. ஒருபக்கம், மேப் பார்த்து வாகனங்களை இயக்கி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது.
மறுபக்கம் 'கூகுள் மேப்'பால் சிலர் தவறான வழியில் இரவு நேரங்களில் சிக்கி பரிதவிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில், கேரளாவில் 14 பேர் கொண்ட நாடக குழு ஒன்று கட்னப்பள்ளியில் நாடகம் நடத்திவிட்டு பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.


டிரைவருக்கு வழி தெரியாத காரணத்தினால் கூகுள் மேப் பார்த்து பஸ்சை இயக்கி உள்ளார். கண்ணனூரில் அருகே பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காயங்குளத்தைச் சேர்ந்த அஞ்சலி மற்றும் கருநாகப்பள்ளியைச் சேர்ந்த ஜெஸ்ஸி மோகன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து மரத்தில் மோதியதும், பஸ்சில் முன் பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் பலியாகினர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
'கூகுள் மேப்' பார்த்து வாகனங்களை இயக்கி, விபத்தில் சிக்காமல் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போல், இனி விபத்து நிகழ கூடாது என்பது அனைவரது விருப்பம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Advertisement