சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி: முதல்வர் கிண்டல்

10

அரியலூர்: '10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறந்த ஆட்சியை தந்தது என சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திட்டத்தை அறிவித்தோம். நிதி ஒதுக்கினோம். அதிகாரிகள் பார்த்து கொள்வார்கள். நாம் ஓய்வு எடுப்போம் என்று எண்ணுகிறவன் நான் அல்ல.
முந்தைய ஆட்சி காலத்தில் ஒரு சிலர் இருந்தார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாது. தெரிந்தாலும் தெரியாத மாதிரி இருப்பார்கள். டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொல்வார்கள். நான் பிரச்னையை எதிர் கொண்டு தீர்த்து வைக்கிறேன். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வருகிறேன்.

கள ஆய்வு




திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என்று கள ஆய்வு செய்கிறேன். சொன்ன திட்டங்கள் சொன்ன நாட்களில் திறந்து வைக்கிறேன். இதனை எங்கு சென்றாலும் மக்கள் என்னை வரவேற்கிறார்கள். தேடி வந்து மனுக்களை கொடுக்கிறார்கள். மக்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்.


மக்கள் என் மீதும் தி.மு.க., மீதும் மக்கள் வைத்துள்ள அன்பும், பாசமும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் தன்னை மறந்து விடுவார்கள் என்று நினைத்து தினமும் மீடியா முன்பு நின்று கொண்டு பழனிசாமி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். 10 ஆண்டு காலம் அ.தி.மு.க., சிறந்த ஆட்சியை தந்தது என்றும், தி.மு.க., சிறப்பான ஆட்சியை தரவில்லை என்றுமு் சிரிக்காமல் பேட்டி கொடுக்கிறார் பழனிசாமி.

ரூ. 3 லட்சம் கோடி




பொய்க்கு மேக்கப் போட்டால் உண்மை ஆகிவிடாது. அது இன்னும் பளிச் என்று அம்பலப்பட்டு போகும். தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்று பழனிசாமி நடத்தினார். 3 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டேன் என்று பெருமையோடு பேசுகிறார். பழனிசாமியிடம் நான் கேட்கிறேன். நீங்க நடத்திய மாநாடு மூலம் எவ்வளவு கோடி ரூபாய் முதலீடு வந்தது. இதனை புள்ளி விவரங்களுடன் சொல்ல முடியுமா?

திராவிட மாடல்




கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் என ஊழல் ஆட்சி நடத்தியவர் பழனிசாமி. அ.தி.மு.க., ஆட்சி எப்படா முடியும் என தமிழர்கள் காத்திருந்த நிலையில் தான் இருந்தது.
திராவிட மாடல் ஆட்சி எந்நாளும் தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். தமிழக மக்களுடன் 60 ஆண்டுகளாக இருக்கிறேன். தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல. எப்போதும் மக்களுடன் இருந்து தேவைகளை அறிந்து தீர்த்து வைக்கிறேன். இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக உருவாக்க திராவிட மாடல் அரசு பாடுபடுகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


புதிய திட்டங்கள்




அரியலூரில் பல திட்டங்களை தீட்டியதால் கம்பீரமாக உங்கள் முன் நிற்கிறேன் எனக் கூறி, முதல்வர் ஸ்டாலின் திட்டங்களை அறிவித்தார். அவை என்னென்ன?

* அரியலூரில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ரூ.3.20 கோடியில் மேம்படுத்தப்படும்.


* ரூ.25 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும்.



* ரூ.15 கோடியில் 35 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்படும்.


* கலெக்டர் வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை நிலையத்திற்கு ரூ.4.30 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.

Advertisement