ஒழுங்கா பட்டா கொடுக்கணும்! அதிகாரியை ஒரு விரல் நீட்டி 'கடுகடுத்த' அமைச்சர் பொன்முடி

8

விழுப்புரம்; மக்களுக்கு ஒழுங்காக பட்டா கொடுக்க வேண்டும். அதற்கான எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரியை அமைச்சர் பொன்முடி ஒருவிரல் நீட்டி கடுகடுத்து பேசினார்.



விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியம், காடகனூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் பொன்முடி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அதற்கான விழா இன்று நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசிக் கொண்டு இருந்த போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தங்களுக்கு பட்டா தருவதில் அதிகாரிகள் தாமதப்படுத்தவதாக புகார் கூறினார். மக்களின் குமுறலையும், அதிருப்தியை கண்ட அமைச்சர் பொன்முடி உடனடியாக அங்கேயே நடவடிக்கையில் இறங்கினார்.

சம்பந்தப்பட்ட கண்டாச்சிபுரம் வட்டாட்சியரை மேடையில் இருந்தபடி அழைத்தார். அமைச்சரின் திடீர் அழைப்பால் ஒரு கணம் திகைத்த வட்டாட்சியர் உடனடியாக அவர் முன் சென்றார். அப்போது பொன்முடி பேசியதுதான் ஹைலைட்.

அவர் பேசியதாவது: முதல்வர் வரும் போது, இன்னும் 10 நாட்களில் எல்லோருக்கும் பட்டா கொடுக்க போகிறோம். நம் மாவட்டத்தில் புதுசா 10 ஆயிரம் பேருக்கு பட்டா தர உள்ளோம்.

எல்லாம் கரெக்டாக பண்ணி, இந்த தாலுகாவில், தொகுதியில் எங்கேயும் பட்டா இல்லாமல் இருக்கக்கூடாது. உங்களுக்கு எங்கேயாவது இருந்து அது வரணும், இது வரணும் என்று (ஒரு விரலை நீட்டி) பார்த்திட்டு இருக்கக்கூடாது.

ஒழுங்கா நீங்க தான் சரியான புறம்போக்கு நிலமா இருந்தா, அதில் பட்டா கொடுப்பதற்கான எல்லா வேலையும் செய்யணும். ஏதாவது நின்னுச்சன்னா, அப்புறம் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ, முதல்வர் அதை செஞ்சிருவாரு.

இது என் தொகுதி. முன்னமே சொன்ன மாதிரி ரொம்ப பழக்கப்பட்ட ஊரு. நாளைக்கு பிரச்னையும் இருக்கக்கூடாது. பட்டா கொடுக்கணும்.

இவ்வாறு அதிகாரியை அமைச்சர் பொன்முடி அதட்டி, நடவடிக்கையை வேகப்படுத்தினார்.
பின்னர், அதே மேடையில் புகார் கூறிய பெண்ணை பார்த்து, பட்டா வந்துவிடும் என்றும் உறுதி கூறினார். மேடையில் நின்றபடி, அதிகாரியை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி துளைத்தெடுத்ததை கண்டதும், புகார் கூறிய பெண் மகிழ்ச்சியுடன் திரும்பிச்சென்றார்.

Advertisement