மருமகனை துணை முதல்வராக்க மம்தாவுக்கு நெருக்கடி
கோல்கட்டா: மேற்குவங்க மாநில ஆளும் திரிணமுல் காங்., பொதுச் செயலரும், எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜியை துணை முதல்வராக்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இம்மாநிலம் கோல்கட்டா மருத்துவ கல்லூரி,மருத்துவமனையில் பெண் டாக்டர் பலாத்காரம் ,கொலை சம்பவம், அமலாக்கத்துறையால் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டது என முதல்வர் மம்தா பானர்ஜி அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறார். தற்போது கட்சியின் பொதுச்செயலரான அபிஷேக் பானர்ஜி, லோக்சபா எம்.பி.,யாக உள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் பானர்ஜியை துணை முதல்வராக்கிட திரிணமுல் காங்., கட்சியில் ஆதரவு கோஷம் எழுந்துள்ளது. பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் அபிஷேக் பானர்ஜிக்கு ஆதரவாக உள்ளனர்.
இது குறித்து திரிணமுல் காங். கட்சியைச் சேர்ந்த ஹூமாயுன் கபீர் கூறியது, தற்போது மோடி அரசு பெரும்பான்மையின்றி மைனாரிட்டி அரசாக உள்ளது. விரைவில் கவிழும், ‛இண்டியா' கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி, டில்லி அரசியலில் கவனம் செலுத்தி மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கு முன்பாக அபிஷேக் பானர்ஜியை துணை முதல்வராக்கிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.