கிளியனூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை- இஸ்லாமியர் எதிர்ப்பு- சிலையை அகற்றிய இடத்தில் பிரவேசிக்க தடை.
மயிலாடுதுறை: கிளியனூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ததற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது இதை அடுத்து சிலைகளை அப்புறப்படுத்திய அரசு அதிகாரிகள் அந்த இடத்தில் இரு தரப்பினரும் பிரவேசிக்க தடை விதித்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே கிளியனூர் மெயின்ரோட்டில் ஓமக்குளம் உள்ளது. இக்குளத்தின் கரையில் பழங்காலத்தில் அரசமரம் மற்றும் விநாயகர் சிலை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசமரம் வெட்டப்பட்டு அந்த இடத்தை ஆக்கிரமித்து இஸ்லாமியர் ஒருவர் கறிக்கடை நடந்தி வருகிறார். பழங்காலத்தில் விநாயகர் சிலை இருந்த இடத்தில் மீண்டும் விநாயகர் கோயில் அமைக்க வேண்டுமென்று அந்த கிராமத்தில் உள்ள இந்து மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை நடந்து முடிவு எட்டாத நிலையில் நேற்று சர்ச்சைக்குறிய இடத்தில் இந்து மக்கள் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை அதிகாலையில் பிரதிஷ்டை செய்து மாலை அணிவித்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்த ஜமாத்தார்கள் அந்த விநாயகர் சிலையை அங்கிருந்து அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார், தரங்கம்பாடி தாசில்தார் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதுடன், அங்கிருந்த விநாயகர் சிலையை பறிமுதல் செய்து தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சீர்காழி ஆர்டிஓ சுரேஷ், மயிலாடுதுறை டிஎஸ்பி. திருப்பதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரையும் அழைத்து பேசினர். பழங்காலம் முதல் குளத்துக்கரையில் விநாயகர் சிலை இருந்துள்ளது. அதற்கான ஆவணங்கள் வருவாய்த்துறையில் உள்ளது. அதனால் அங்கு விநாயகர் கோயில் அமைக்க வேண்டுமென்று இந்துக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து ஆர்டிஓ தலைமையில் வரும் 26, 27 தேதிகளில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்ததுடன், அதுவரையில் சர்ச்சைக்குறிய இடத்தில் இரு தரப்பினரும் பிரவேசிக்க கூடாது என்று தடை விதித்தனர். பசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.