பாக்., முடிவு: பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்திலுள்ள அணிகள் மட்டும் பங்கேற்கும். கடைசியாக 2017க்குப் பின், பாகிஸ்தானில் இத்தொடர் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால் 2008ல் மும்பை, பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா, பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்றதில்லை.
இதனால், 'சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள், பைனலை துபாயில் நடத்த வேண்டும்,' என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.,) தெரிவித்தது. இதை ஏற்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) மறுத்தது.
ஒருவேளை இந்திய அணி பங்கேற்கவில்லை எனில், மற்றொரு அணியை சேர்த்து, தொடரை நடத்த முயற்சிக்கிறது. இதனிடையே, 'பாகிஸ்தானில் இன்று சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பயணம் துவங்குகிறது,' என பி.சி.பி., அறிவித்தது. தவிர பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீரில் உள்ள 3 நகரங்கள் வழியாக செல்லும் என தெரிவித்தது.
இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ., செயலர் ஜெய் ஷா, ஐ.சி.சி., முக்கிய நிர்வாகிகளை அழைத்து பி.சி.பி., செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதனால், சாம்பியன்ஸ் டிராபி பயணத்தை ஐ.சி.சி., நிறுத்தி வைத்தது.
ஐ.சி.சி., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,'' கோப்பை பயணம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் குறிப்பிட்ட 4 நகரங்களை பாகிஸ்தான் தேர்வு செய்துள்ளதா எனத் தெரியவில்லை.
இது சரியான செயல் அல்ல. சர்ச்சைக்குரிய பகுதியில் கோப்பை கொண்டு செல்ல ஐ.சி.சி., அனுமதிக்காது,'' என்றார்.