ஐயப்ப பக்தர்களுக்கு இடுக்கியில் அடிப்படை வசதிகள் தயார்

மூணாறு:சபரிமலை மண்டல, மகர விளக்கு உற்ஸவத்தையொட்டி கேரளா இடுக்கி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்மாவட்டத்தில் சத்திரம், புல்மேடு வழியில் சபரிமலைக்கு காட்டு பாதையில் நடந்து செல்லலாம். இந்த பாதையில் இன்று காலை 6:00 மணிக்கு நடக்கும் பூஜைக்கு பிறகு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வழியில் தேவசம் போர்டு சார்பில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சத்திரத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போலீசார், சுகாதாரத்துறையினர் பணி செய்வதற்கு வசதியாக தற்காலிக ஷெட்கள் அமைக்கப்பட்டன. வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி அதிகரிக்கப்பட்டது. தற்போதுள்ள மைதானத்தின் கீழ் பகுதியில் வேறொரு மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு உதவி ஆணையர் கோபகுமார் தெரிவித்தார்.

இலவச உணவு



இந்தாண்டு முதல் சத்திரத்தில் இரவு தங்கும் பக்தர்களுக்கு இன்று முதல் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. சத்திரம் முதல் புல்மேடு வரையிலான ஆறு கி.மீ., துாரத்தில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரி ஜோதிஷ் ஜே. ஒழாக்கல் தெரிவித்தார்.

மண்டல ,மகர விளக்கு உற்ஸவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து எர்ணாகுளம் மண்டல டி.ஐ.ஜி. தோம்சன்ஜோய் தலைமையில் வண்டி பெரியாறு போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் இடுக்கி எஸ்.பி. விஷ்ணு பிரதீப், டி.எஸ்.பி.க்கள் ராஜேஷ்குமார், சஜீவ்செரியான், விசால்ஜான்சன், பிஜூ, வண்டிபெரியாறு இன்ஸ்பெக்டர் சுவர்ணகுமார் பங்கேற்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் மண்டல கால, மகர விளக்கு உற்ஸவத்தையொட்டி குமுளி, வண்டி பெரியாறு, சத்திரம், புல் மேடு, பீர்மேடு, குட்டிகானம், பெருவந்தனம் உள்பட முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் குறித்து உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் பத்து பிரிவுகளில் ஒரு டி.எஸ்.பி. தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்கு பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களைச் சேர்ந்த 562 போலீசார் வண்டிபெரியாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு பக்தர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சத்திரத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என எஸ்.பி. விஷ்ணுபிரதீப் கூறியதால் அது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Advertisement