பள்ளி கட்டடம் கட்டாததை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு; பரங்கிப்பேட்டையில் பரபரப்பு

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், இடிக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை மீண்டும் கட்டித்தராததை கண்டித்து, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை கும்மத்பள்ளி தெருவில், 1903ம் ஆண்டு கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 117 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 5 வகுப்பறைகள் இருந்தது.

அதில், இரு வகுப்பறை கட்டடங்கள் சேதமானதால் கடந்த 2018ல் இடிக்கப்பட்டது. மற்றொரு கட்டடத்தில் உள்ள மூன்று அறைகளில் ஒன்றில் கம்ப்யூட்டர் அறையும், மற்ற இரு வகுப்பறைகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லாததால், கடந்த 6 ஆண்டாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பெற்றோர் கோரிக்கையின் பேரில் இடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடத்தை கட்ட பாண்டியன் எம்.எல்.ஏ., தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செயதார். அதனையொட்டி, பள்ளி கட்டடம் கட்ட ஏற்பாடுகள் நடந்தது.

இந்நிலையில், பள்ளி கட்டடம் கட்ட வேண்டிய இடத்தை சிலர் ஆக்கிரமித்ததால், கட்டடம் கட்டுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், புதிய கட்டடம் கட்டும்வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில்லை என பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாணவர்கள் யாரும் பள்ளிக்கு செல்லாமல், வகுப்புகளை புறக்கணித்தனர். மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்திருந்தனர்.

தகவலறிந்த வட்டாரக் கல்வி அலுவலர் உமாராணி, டி.எஸ்.பி., லாமேக் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாணை நடத்தினர். தொடர்ந்து பழைய பள்ளிக் கட்டட இடத்தில் இந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் அகற்றினர். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு, மூன்று மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி கட்டடம் கட்டாததை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்த சம்பவத்தால் பரங்கிப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement