சரண கோஷம் முழங்க சபரிமலை நடை திறக்கப்பட்டது பக்தர்களுக்கான ஏற்பாடுகள் திருப்தியளிக்கிறது : அமைச்சர்

சபரிமலை:பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் இந்தாண்டு மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம் போர்டும் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருப்திகரமான அளவுக்கு செய்துள்ளது என அமைச்சர் வாசவன் தெரிவித்தார்.

கார்த்திகை 1 ம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள் சபரிமலையில் ஒரு மண்டல காலம் என அழைக்கப்படுகிறது. 41 வது நாள் மண்டல பூஜை நடக்கும். இன்று (நவ.,16) துவங்கும் மண்டல காலத்துக்காக நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18 படிகள் வழியாக சென்று ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்தார்.

திருநீறு பிரசாதம் வழங்கல்



தொடர்ந்து 18 படிகளின் கீழ்பகுதியில் இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள் சபரிமலை அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கைபிடித்து அழைத்து கொண்டு ஸ்ரீ கோயில் முன் வந்தனர். இருவருக்கும் திருநீறு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:30 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரிக்கு தந்திரி பிரம்மதத்தன் அபிஷேகம் நடத்தி ஐயப்ப மூல மந்திரத்தை சொல்லிக் கொடுத்து ஸ்ரீ கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். இதுபோல மாளிகைப்புறத்திலும் மேல் சாந்தி வாசுதேவன் நம்பூரிக்கு அபிஷேகம் நடத்தி தேவி மூல மந்திரம் சொல்லிக் கொடுத்து ஸ்ரீ கோயிலுக்குள் அழைத்து சென்றார். வேறு விசேஷ பூஜைகள் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நெய் அபிேஷகம் துவக்கம்



இன்று அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை பிறந்த பின்னர் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடக்கும்.

40 லட்சம் டின் அரவணை ஸ்டாக்



இந்நிலையில் கேரள தேவசம் அமைச்சர் வி.என்.வாசவன் கூறியதாவது: நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை எட்டாயிரத்திலிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டாயிரத்து 700 பேர் தங்கும் வகையில் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் மருத்துவமனைகளில் பக்தர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மலை ஏறும் போது பக்தர்கள் களைப்பாறுவதற்கு வசதியாக ஸ்டீல் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் பக்தர்கள் மழை மற்றும் வெயிலில் இளைப்பாற வசதியாக நவீன ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 40 லட்சம் டின் அரவணை ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. கேரளா அரசு உடன் இணைந்து தேவசம்போர்டு பக்தர்களுக்காக செய்துள்ள வசதிகள் திருப்தியாக உள்ளது என்றார்.

Advertisement