பா.ம.க., ராமலிங்கம் கொலை வழக்கில் 5 ஆண்டாக தேடப்பட்ட நபர் கைது
சென்னை:பா.ம.க., பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில், 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்து, ஐந்து ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 45; பா.ம.க., பிரமுகர். ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்ட அவர், திருபுவனம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நடந்த மதமாற்றத்தை தட்டிக் கேட்டார்.
கடந்த 2019 பிப்., 5ல், மர்ம நபர்களால் ராமலிங்கம் கொடூரமாக கொல்லப்பட்டார். இதுகுறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தொடர் விசாரணையில், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், திருவிடைமருதுாரைச் சேர்ந்த, 18 பேர், ராமலிங்கத்தை கொலை செய்தது தெரியவந்தது.
அவர்களில் திருவிடைமருதுார், நடு முஸ்லிம் தெருவைச் சேர்ந்த ரஹ்மான் சாதிக், 41, மற்றும் அவரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், திருபுவனம் முகமது அலி ஜின்னா, 36; கும்பகோணம் அப்துல் மஜீத், 39. பாபநாசம் புர்ஹானுதீன், 31; திருவிடைமருதுார் சாகுல் ஹமீது, 29 மற்றும் நபீல் ஹாசன், 30 ஆகியோரை, தேடப்படும் நபர்களாக, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அறிவித்தனர்.
அவர்கள் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு, தலா, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்த, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று கைது செய்தனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது;
ராமலிங்கம் கொலை வழக்கில், முகமது அலி ஜின்னா உட்பட, 18 பேர் மீது, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முகமது அலி ஜின்னாவுக்கு, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே, பூம்பாறை என்ற கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. அங்கு தன் கூட்டாளி சாகுல் ஹமீதுக்கு அடைக்கலம் கொடுத்து, தானும் தங்கி உள்ளார்.
அவர், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அந்த அமைப்பின் அறிவகம் என்ற இடத்தில்தான் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அங்கிருந்துதான் கொலையாளிகள் திருபுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட பகுதிகளில், ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மூளைச்சலவை செய்து, முஸ்லிம்களாக மதமாற்றம் செய்து வந்தனர்.
அதை கண்டித்த ராமலிங்கத்தை கொலை செய்ததாக, முகமது அலி ஜின்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.