ஹிந்து கோவில் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ்காரர் குற்றமற்றவர்: கனடா அரசு

2

ஒட்டாவா: கனடாவில், ஹிந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அந்நாட்டு போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி குற்றமற்றவர் என, அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில், கடந்த ஆண்டு ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்தே, இந்தியா - கனடா உறவு சுமுகமாக இல்லை.

இது ஒருபுறமிருக்க, கனடாவில் உள்ள ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பிராம்ப்டன் நகரில் உள்ள ஹிந்து கோவில் முன், கடந்த 3ம் தேதி போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், அங்கிருந்த ஹிந்துக்களை சரமாரியாக தாக்கினர். இதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

இந்த போராட்டம் தொடர்பான வீடியோவில், கனடா போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி என்பவர், காலிஸ்தான் கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கனடாவின் பீல் பிராந்திய போலீஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து செல்லும்படியும், ஆயுதங்களை ஒப்படைக்கும்படியும் போலீஸ் அதிகாரி ஹரிந்தர் சோஹி வலியுறுத்தி உள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

'அந்த நேரத்தில் அவர், 'மப்டி'யில் இருந்துள்ளார். விசாரணையில், ஹரிந்தர் சோஹி குற்றமற்றவர் என்பது தெரிய வந்தது' என குறிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டம் நடந்த போது, காலிஸ்தான் கொடியை ஹரிந்தர் சோஹி ஏந்தியது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

மேலும், போராட்டக்காரர்களை கலைக்க அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதும் தெரிகிறது. அப்படியிருக்கையில், அவர் குற்றமற்றவர் என கனடா போலீஸ் தெரிவித்தது, விமர்சனத்துக்குஉள்ளாகி உள்ளது.

Advertisement