தடகள திறனாய்வு செய்வோம் போட்டி நடத்த மாட்டோம்; விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய அணுகுமுறை
மதுரை : மூன்றாண்டுகளாக பள்ளிகளில் 6- 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு உலக தடகள திறனாய்வு (பாட்ரி டெஸ்ட்)தேர்வுகள் நடத்தப்பட்டாலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.,) சார்பில் மாவட்ட, மாநிலப் போட்டிகள் நடத்தப்படவில்லை.
உலகத் தடகள திறனாய்வு தேர்வு மூலம் மாணவர்களின் ஓட்டத்திறன், உடல் வலிமை, வளையும் தன்மை, நெகிழும் தன்மை என பல்வேறு திறன்கள் கண்டறியப்படுகின்றன. அதற்கேற்ப தடகளம், வாலிபால், கால்பந்து என சரியான போட்டிகளில் பங்கேற்க உடற்கல்வி ஆசிரியர்கள் பரிந்துரை செய்து பயிற்சி அளிப்பர். கொரோனாவுக்கு பின் ஆண்டுதோறும் பெயருக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டாலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாவட்ட, மாநில போட்டிகளை நடத்தவில்லை. இதனால் திறமையான வீரர், வீராங்கனைகள் வெளியே வரமுடியவில்லை என்கின்றனர் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள்.
அவர்கள் கூறியதாவது: மதுரை சக்கிமங்கலம் ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி 'பாட்ரி டெஸ்ட்' மூலம் கண்டறியப்பட்டு பயிற்சியாளர் கண்ணன் மூலம் பயிற்சி பெற்று டோக்கியோ ஒலிம்பிக் தடகளப்போட்டியில் பங்கேற்றார். முக்கியத்துவம் வாய்ந்தது இந்த 'பாட்ரி டெஸ்ட்'. மாணவர்களை தேர்வு செய்த பின் மாவட்ட, மாநில அளவில் ஆணையம் போட்டிகள் நடத்தி தனியாக பரிசுத்தொகையும் வழங்கியது. மேலும் மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டு அணிகளும் உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்கப்பட்டு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கும் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போதுபள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் குறுவட்ட போட்டியில் வெற்றி பெறாவிட்டால் அந்த மாணவர்களுக்கு மறுவாய்ப்பே இல்லை. 'பாட்ரி டெஸ்ட்' அரசுப் பள்ளி மட்டுமின்றி, அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் முன்பு நடத்தப்பட்டது. தற்போது மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு அந்த வாய்ப்பும் வழங்கவில்லை. மாணவர்களுக்கு பரிசுத்தொகை தரவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு மாவட்ட, மாநில போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பள்ளிக்கல்வித்துறையின் குடியரசு தின, பாரதியார் தினவிழா மாநில போட்டி களில் வெற்றி பெறுபவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது.
ஒலிம்பிக் அகாடமி உருவாக்கினால் மட்டும் போதாது. 'பாட்ரி டெஸ்ட்' மூலம் திறமையான மாணவர்களை தொடர்ந்து உருவாக்க போட்டிகள் நடத்த வேண்டும் என்றனர்.