தனியார்மயத்தால் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்
சென்னை: ''ரயில்வேயில் தனியார்மயமாக்கல் கொள்கையால், ரயில்வே ஊழியர்கள் மட்டுமல்ல, பொது மக்களும் பாதிக்கப்படுவர்,'' என, எஸ்.ஆர்.எம்.யு., பொதுச்செயலர் கண்ணையா கூறினார்.
எஸ்.ஆர்.எம்.யு., எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் அருகே, மத்திய அரசின் தனியார்மய கொள்கையால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கூட்டம், நேற்று நடந்தது; 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற பின், எஸ்.ஆர்.எம்.யு., பொதுச்செயலர் கண்ணையா அளித்த பேட்டி:
ரயில்வே துறையில் 14 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 60 சதவீதம் பேரின் வேலை வாய்ப்பை குறைக்க முடிவெடுத்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், பணி நியமனம் செய்வது தான் மத்திய அரசின் திட்டமாக இருக்கிறது.
இளைஞர்கள் அதிகமாக பணியாற்றும் துறை ரயில்வே. ரயில்வே துறை வேலைகளை குறைக்கும்போது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோகும். ரயில்வேயில் உள்ள அனைத்து பணியையும் தனியார்மயமாக்க, மத்திய அரசு முயற்சி செய்கிறது.
ரயில்வே வாரியம் புதிதாக, 4,500 'வந்தே பாரத்' ரயில்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. சென்னை ஐ.சி.எப்., ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், ஒரு ரயிலுக்கு தேவையான பெட்டிகள், 98 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகின்றன.
இதை ரஷ்யாவை சேர்ந்த நிறுவனத்திடம், 180 கோடி ரூபாயில் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் வந்தே பாரத் ரயில்களை, ரயில்வே தொழிலாளர்கள் பராமரிக்க முடியாது. யார் தயாரிக்கின்றனரோ, அவர்களே தான் பராமரிப்பு பணியையும் மேற்கொள்வர். இதனால், ரயில்வே தொழிலாளர்கள் வெளியேறும் நிலை ஏற்படும். இது, ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், பொது மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.