தி.மு.க.,வின் ரகசிய திட்டத்தால் உருவாகும் 'போட்டி நாம் தமிழர்'?

3


சென்னை: முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேற வைத்து, நாம் தமிழர் கட்சியை உடைக்க, தி.மு.க., வியூகம் வகுத்துள்ளது.


தொடர் தோல்விகளை சந்தித்தாலும், ஒவ்வொரு தேர்தலிலும், சீமான் கட்சியின் ஓட்டு சதவீதம் அதிகரித்து வருகிறது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் துவக்கி உள்ள த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்க சீமான் விரும்பினார். தன் எண்ணத்தை பல இடங்களிலும் வெளிப்படையாக தெரிவித்தார். ஆனால், சீமான் மட்டுமே பேசிவந்த, 'தமிழ் தேசியம்' என்ற அரசியல் கொள்கையை, விஜய் தன் கொள்கையாக அறிவித்தார். கோபம் அடைந்த சீமான், விஜயை வெளிப்படையாக விமர்சிக்க துவங்கினார்.


அத்துடன் சட்டசபை தேர்தலில், தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். இது, அவரது கட்சியினரிடம் சோர்வை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு பின், அக்கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் வெளியேறி வருகின்றனர். இதனால், பல மாவட்டங்களில், கட்சி செயல்பாடு குறைந்துள்ளது. கட்சியில் இருந்து வெளியேறுவோர், சீமான் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரை, சீமான் கடுமையாக விமர்சித்து பேசுகிறார். அரசின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். இது, தி.மு.க., தலைமைக்கு பிடிக்கவில்லை. அதேநேரம், சீமான் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் வளர்ந்து விடுவாரோ என அஞ்சுகின்றனர். எனவே, நாம் தமிழர் கட்சியை மறைமுகமாக உடைக்கும் பணிகள், மாவட்ட அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


அவர்கள், நா.த.க.,வில் அதிருப்தியில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசுகின்றனர். அதன்பின், சீமானுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து, நாம் தமிழர் கட்சியில் இருந்து அவர்களை விலகச் செய்கின்றனர். ஆனால், அவர்களை தி.மு.க.,வில் சேர்ப்பது கிடையாது. அப்படி சேர்த்தால், விஷயம் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால், அதை செய்வதில்லை. இவ்வாறு விலகும் மொத்த பேரையும் ஒருங்கிணைத்து, போட்டி நாம் தமிழர் கட்சியை துவக்கவும் திட்டமிட்டுஉள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement