சுப்மன் கில் சந்தேகம்: பெர்த் டெஸ்டில் பங்கேற்பது
பெர்த்: கட்டை விரல் காயத்தால் இந்தியாவின் சுப்மன் கில், பெர்த் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் நவ. 22ல் முதல் டெஸ்ட் பெர்த்தில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
இந்திய வீரர்கள், இரு பிரிவுகளாக பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர். இதன் 2ம் நாள் ஆட்டத்தில் 'பீல்டிங்' செய்த போது துவக்க வீரர் சுப்மன் கில்லின் இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. 'ஸ்கேன்' எடுத்து பார்த்ததில், கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது உறுதியானது. பொதுவாக இக்காயத்தில் இருந்து குணமடைய 14 நாட்கள் தேவைப்படும். முதல் டெஸ்ட் துவங்க இன்னும் 5 நாட்களே இருப்பதால், போட்டிக்கு முன் சுப்மன் கில் காயத்தில் இருந்து மீள்வது கடினம். எனவே இவர், முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகம்.
அபிமன்யு வாய்ப்பு: ஒருவேளை சுப்மன் கில் விளையாடாத பட்சத்தில் இந்திய அணிக்கு பின்னடைவாக அமையலாம். ஏற்கனவே கேப்டன் ரோகித் சர்மா முதல் டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. பயிற்சி போட்டியின் முதல் நாளில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து தாக்கியதில் லோகேஷ் ராகுலின் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே ராகுல் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பெங்கால் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அறிமுக வாய்ப்பு பெறலாம். தவிர இந்தியா 'ஏ' அணிக்காக விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ள தேவ்தத் படிக்கல், இந்திய அணியினருடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
'
இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ரோகித் மகிழ்ச்சியில் உள்ளார். இவருக்கு சக இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இனி ஆஸ்திரேலியாவுக்கு ரோகித் செல்லலாம். ஆனாலும் முதல் டெஸ்ட் துவங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இப்போட்டியில் இவர் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஒருவேளை ரோகித் விலகினால், பும்ரா அணியை வழிநடத்துவார்.