கல்வித்துறை பால் பேட்மின்டன் சேது பாஸ்கரா பள்ளி முதலிடம்

சென்னை, வடசென்னை வருவாய் மாவட்ட பால் பேட்மின்டன் போட்டியில், மாணவியரில் அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி, முதலிடத்தைப் பிடித்தது.

அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன.

அந்த வகையில், வடசென்னை வருவாய் மாவட்ட அளவில் மாணவியருக்கான பால் பேட்மின்டன் போட்டிகள், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தன.

இதில், 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவிலும், தலா 13 பள்ளி அணிகள் பங்கேற்றன.

இதில், 19 வயதிற்கு உட்பட பிரிவிருக்கான இறுதிப் போட்டியில், அம்பத்துார் சேது பாஸ்கரா மற்றும் தண்டையார்பேட்டை எம்.டி., பள்ளி அணிகள் மோதின.

அதில், 35 - 16, 35 - 15 என்ற கணக்கில், சேது பாஸ்கரா பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

அதேபோல், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில், கத்திவாக்கம் அரசு பள்ளி மற்றும் அம்பத்துார் சேது பாஸ்கரா அணிகள் மோதின.

விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், 35 - 27, 35 - 28 என்ற கணக்கில் கத்திவாக்கம் அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, 17 வயதினருக்கான ஆட்டத்தில், அண்ணா நகர் ஜேசி மோசஸ் பள்ளி அணி, 35 - 13, 35 - 20 என்ற கணக்கில், அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளியை தோற்கடித்து, முதலிடத்தை பிடித்தது.

போட்டியில் வெற்றி பெற்ற அணிகள், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

Advertisement