பயிர்களை பாதுகாக்க வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும் வேளாண் அதிகாரி தகவல்
திண்டிவனம்: பூச்சி நோயிலிருந்து விவசாயிகள் பயிர்களை பாதுகாக்க வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும் என மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மரக்காணம் வட்டாரத்தில் விவசாயிகள் தற்போது நெல், உளுந்து, வேர்க்கடலை, பனிப்பயறு , கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய், கொடி வகைகள் உள்ளிட்ட காய்கறி பயிர்களையும் பயிரிட்டு வருகின்றனர்.
பயிர்களில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை பூச்சி விரட்டிகளான ஐந்திலை கரைசல், வேப்ப இலை கரைசல், வேப்பங்கொட்டை கரைசல் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்திட வரப்புகளில் உளுந்து பயிர்களை பயிரிட மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தீமை செய்யும் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திடவும், பயிர்களை பாதுகாத்திடவும் அசாடிராக்கின் 0.03 சதவீதம் எனப்படும் வேம்பு மூலக்கூறினை வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் இதனை எக்டருக்கு 1500 மில்லி வீதம் பயன்படுத்தி தங்கள் பயிர்களை தீமை செய்யும் பூச்சிகளில் இருந்து பாதுகாத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.