விழுப்புரத்தில் முதல்வர் மருந்தகம் அமைச்சர் பொன்முடி பெருமிதம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த கூட்டுறவு வார விழாவில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 20 ஆயிரத்து 918 பேருக்கு 89.88 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 ஆயிரத்து 129 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு 24.43 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை மூலம் 923 முழு நேர ரேஷன் கடைகள், 240 பகுதி நேர ரேஷன் கடைகள், 21 மகளிர் சுயஉதவிக் குழுவினரின் ரேஷன் கடைகள் மற்றும் 6 மகளிர் சில்லரை விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் மருந்தகம் செயல்பட்டு வருகிறது. இம்மருந்தகத்தில் 20 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படுகிறது.
அரசு வழங்கும், கூட்டுறவு நலத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.