குழந்தையை கடத்த ஏழை மக்களை குறிவைக்கும் ஏமாற்று பேர்வழிகள்
கண்ணகி நகர்,
கண்ணகி நகரைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி நிஷாந்தி, 30. பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத இவர்களுக்கு, 45 நாட்களுக்கு முன், ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பெயரில், மாதம் 1,000 ரூபாய் அரசு உதவி தொகை வாங்கி தருவதாக கூறி, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த தீபா, 26, என்ற பெண், நிஷாந்தியிடம் இரு நாட்களுக்கு முன் கூறினார்.
அவரது பேச்சை நம்பிய நிஷாந்தி, குழந்தையை துாக்கி கொண்டு தி.நகருக்கு, தீபாவுடன் சென்றார். நிஷாந்தியை ஒரு ஹோட்டலில் சாப்பிட வைத்த தீபா, குழந்தையை கடத்தி சென்றார்.
கண்ணகி நகர் போலீசார் விசாரித்து, திருவேற்காடில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து குழந்தையை மீட்டு, நேற்று முன்தினம் இரவு நிஷாந்தியிடம் ஒப்படைத்தனர்.
தீபாவின் கணவர் ஹரியிடம் விசாரிக்கின்றனர். தலைமறைவான தீபாவை தேடுகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
தீபாவுக்கு குழந்தை இல்லை. உறவினர்கள், குழந்தை குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டதால், கணவர், உறவினர்களிடம் கர்ப்பமாக இருப்பதாக கூறி உள்ளார்.
வெளியே செல்லும்போது, துணிகளை கட்டி வயிற்று பகுதியை பெரிதாக காட்டினார். ஒவ்வொரு மாதமும், அரசு மருத்துவமனை சென்று, காய்ச்சல், சளி என மருந்து வாங்கி, கர்ப்பத்திற்கு பரிசோதனை செய்ய சென்றதாக, உறவினர்களை நம்ப வைத்தார்.
எட்டு மாதங்கள் ஆனதால், ஒரு குழந்தையை திருடி நம்ப வைக்க முடிவு செய்தார்.
இதற்காக, எழும்பூர், திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு பல நாட்கள் சென்றுள்ளார். அங்கு, குழந்தை திருட முடியாது என்பதை உணர்ந்த தீபா, வெளியே வைத்து ஏமாற்றி திருட முடிவெடுத்தார். இதற்கு, மிகவும் ஏழை பெண்களாக பார்த்து தேர்வு செய்தார்.
தான் ஒரு அரசு ஊழியர் என, சிலரிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் முகவரி, மொபைல் எண்களை வாங்கினார்.
திடீரென, நிஷாந்தி வீட்டுக்கு சென்று, குழந்தைக்கு மாதம் உதவி தொகை கிடைக்கும் என பேசினார்.
நிஷாந்திக்கு சந்தேகம் வராமல் இருக்கவும், அவரை நம்ப வைக்கவும், அதே பகுதியில் உள்ள இதர பிளாக்குகளில் சென்றும், பச்சிளம் குழந்தைகளின் பெற்றோரை சந்தித்து உதவி தொகை தகவலை கூறினார்.
நிஷாந்தி வெகுளியாகவும், கணவர், உறவினர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்ததால், அவர்களை நம்ப வைத்து குழந்தையை திருட திட்டமிட்டார்.
கடத்தி சென்ற பின், குழந்தைக்கு பால் இல்லாமல் உடல்நிலை மோசமடைந்ததால், திருவேற்காடு, ஏ.சி.எஸ்., மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தலைமறைவானார்.
அரசு திட்டங்கள் எனக்கூறி யாராவது வீட்டுக்கு வந்தால், முன்னெச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் தானா என, முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
வாரிய குடியிருப்புகளில், எழுத, படிக்க தெரியாத ஏழை மக்கள் அதிகமாக வசிப்பதால், அவர்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.
விழிப்புடன் இருப்பது அவசியம். சமுதாய வளர்ச்சி பிரிவும், வாரிய மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.