எங்களை வில்லனாக சித்தரிப்பது ஏன்? பா.ஜ., - எம்.பி., சுதாகர் குற்றச்சாட்டு

சிக்கபல்லாபூர்: ''கொரோனா ஊழல்கள் நடந்ததாக குற்றம்சாட்டும் அரசு, அதை நிரூபிக்க வேண்டும். மக்களின் பார்வையில், எங்களை வில்லன்களாக காட்ட முயற்சிக்கின்றனர்,'' என பா.ஜ., - எம்.பி., சுதாகர் குற்றஞ்சாட்டினார்.

சிக்கபல்லாபூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:



கொரோனா ஊழல் தொடர்பாக, பா.ஜ., மீது காங்கிரஸ் அரசு குற்றஞ்சாட்டுகிறது. இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.

மக்களின் பார்வையில், எங்களை வில்லன்களாக காட்ட முயற்சி நடக்கிறது. காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும். அப்போது யார், யார் எங்கெங்கு இருப்பர் என்பது தெரியும்.

கொரோனா ஊழல் தொடர்பான விசாரணை கோணத்தை, அரசு அவ்வப்போது மாற்றுகிறது. இந்த அரசை பற்றி, என்ன சொல்வது என்பது தெரியவில்லை.

நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை முடியவே இல்லை.

முதற்கட்ட அறிக்கையை பெற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் விசாரணை நடத்த துணை முதல்வர் தலைமையில், ஏழு அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை துணை கமிட்டி அமைத்து, மற்றொரு அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பித்து, ஒரு மாதம் கடப்பதற்குள், மற்றொரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது.

உலகம் முழுதும் கொரோனா நடவடிக்கை குறித்து, விசாரணை நடத்துவது கர்நாடகாவில் மட்டுமே. அன்றைய முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு, திடீரென முடிவு எடுக்கவில்லை. தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி, டாஸ்க் போர்ஸ் சிபாரிசுபடி முடிவு செய்தனர்.

மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, விமானம் அனுப்பி சீனாவில் இருந்து, மருத்துவ உபகரணங்கள் வரவழைக்கப்பட்டன.

கர்நாடகாவுக்கு மருத்துவ உபகரணங்கள் வந்த போது, நாட்டின் வேறு எந்த மாநிலங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வந்தன என்பதை, காங்கிரசார் கூறட்டும் பார்க்கலாம்.

அப்போது இவர்கள் வீட்டுக்குள் இருந்தனர். இப்போது அதிகாரம் கைக்கு கிடைத்ததால், குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement