80 சீட் தர வேண்டும்: அ.தி.மு.க., கூட்டணியில் சேர விஜய் நிபந்தனை
அ.தி.மு.க.,வுக்கு, 154; த.வெ.க.,வுக்கு, 80 என தொகுதி பங்கீடு செய்து, சட்டசபை தேர்தலை கூட்டாக சந்திக்க, இரு கட்சிகளும் பேசி வருகின்றன.
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பின், தென் மாவட்டங்களில் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்துள்ளது.
ஆனால், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்பதில், பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி இல்லை என்பதிலும் தெளிவாக இருக்கிறார்.
உடையவில்லை
அதேநேரம், ஆளும் தி.மு.க., கூட்டணியில் சலசலப்புகள் எழுந்தாலும், பழனிசாமி கணித்தது போல, அது உடையவில்லை. 'அடுத்த தேர்தலை சேர்ந்தே சந்திப்போம்' என்று, அதில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் கூறுகின்றன.
அந்த கூட்டணியை பழனிசாமியால் எப்படி எதிர்கொள்ள முடியும் என்று, அவரது கட்சியினரே திகைத்து நின்ற நேரத்தில், நடிகர் விஜய் களமிறங்கி இருக்கிறார்.
தி.மு.க., எதிர்ப்பை அவர் பிரதானமாக கையில் எடுத்திருப்பது, அ.தி.மு.க.,வுக்கு இணக்கமான அம்சம். எம்.ஜி.ஆர்., உருவாக்கிய அக்கட்சியை விஜய் இதுவரை விமர்சிக்கவில்லை என்பது, இன்னொரு பிளஸ் பாயின்டாக பார்க்கப்படுகிறது.
ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத கட்சியை விமர்சனம் செய்வதில் அர்த்தம் இல்லையே என்று, விஜய் கட்சியினர் விளக்கம் அளிக்கின்றனர்.
அதில், நியாயம் இருந்தாலும், பாரம்பரியமான தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை வைத்துள்ள அ.தி.மு.க.,வை விமர்சிப்பது, தன் புதிய கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது என்பதை விஜய் உணர்ந்துள்ளார். இதையே அவரது மவுனம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில், 50 சதவீத ஓட்டுகளுக்கு மேல் வாங்கி, உண்மையான பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது இல்லை. 25 முதல், 30 சதவீத ஓட்டுகளை பெற்று, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதே வாடிக்கையாக நடக்கிறது.
தக்கவைக்கின்றன
அதாவது, எதிர்ப்பு ஓட்டுகள் பல கட்சிகளுக்கு பிரிந்து செல்வதால், பிரதான கட்சி ஆட்சியை பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடிகிறது.
இந்த பின்னணியில் தான், பலமான கூட்டணிக்கு அவசியம் ஏற்படுகிறது. பழனிசாமியும், விஜயும் அப்படிப்பட்ட ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இளைஞர் பட்டாளத்தை எளிதில் திரட்டும் சக்தி பெற்றவர் என்பதை, முதல் மாநாடு வாயிலாக விஜய் நிரூபித்து உள்ளார்.
ஓட்டு வங்கியில் விரிசல் விழுந்தாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் வெளியேறவில்லை என்பதை பழனிசாமி காட்டியுள்ளார். இருவரின் பலமும் சேரும் போது, தி.மு.க.,வின் வலுவான கட்டமைப்பை சேதப்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
விரும்பவில்லை
தனித்து நிற்பேன் என்று முழக்கம் எழுப்பி, ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு சதவீதம் அதிக ஓட்டு வாங்கி வாழ்நாள் முழுதும் கோட்டை வாசலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்க்க விஜய் விரும்பவில்லை.
ஆட்சி கட்டிலுக்கு கூட்டணி தான் பாதை என்று நாடெங்கும் உறுதியான பிறகு, என் வழி தனி வழி என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி என்று அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.
அதே சமயம், பத்தோடு பதினொன்றாக எந்தக் கூட்டணியிலும் சேர அவர் தயாராக இல்லை. அதன் விளைவு தான், அ.தி.மு.க.,வை நோக்கி அவரை நகர வைத்துள்ளது என்று விஜய்க்கு நெருக்கமான ஒரு ஆலோசகர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வின் ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்த போது, 70:30 என்ற விகிதத்தில் தொகுதிகளை பங்கிட்டனர். அதன்படி அ.தி.மு.க.,வுக்கு 163, காங்கிரசுக்கு 71 என, பிரிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர்., பார்முலா என்றே அதற்கு பெயர் சூட்டினர்.
விஜய் அதிலும் ஒரு அடி முன்னால் செல்ல விரும்புகிறார். த.வெ.க.,வுக்கு, 80 கேட்கிறார். அப்படி கொடுத்தால் அ.தி.மு.க.,வுக்கு, 154தான் மிஞ்சும்.
விசுவரூபம்
எப்படியும் சிறு கட்சிகள் வரத்தான் செய்யும். அவர்களுக்கு ஒன்றிரண்டு கொடுத்தால் இன்னும் குறையும். மெஜாரிட்டிக்கு தேவையான, 118 தொகுதிகளை வெல்ல முடியுமா என்ற குழப்பம் உருவாகும். எழுந்தால் ஒரே பதில், கூட்டணி ஆட்சி என்பது தான்.
ஆக, விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் முன்மொழிந்த இலக்கை பழனிசாமி வழி மொழிவாரா என்ற கேள்வி தான் விசுவரூபம் எடுத்து நிற்கிறது.
அப்படி நடந்து வெற்றியும் வசமானால், பழனிசாமி முதல்வர், விஜய் துணை முதல்வராகலாம். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தன் ஈகோவை கழற்றி வைத்து விட்டு, நடிகர் பவன் கல்யாண் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது போல, பழனிசாமியும் செய்தால் முதல் தேர்தலிலேயே துணை முதல்வர் நாற்காலியில் அமரலாம் என, விஜய்க்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.
இறுதி முடிவு எதுவும் எட்டவில்லை என, இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கூறுகின்றனர். விட்டுக் கொடுக்கும் தொகுதிகளில் உள்ள நிர்வாகிகளையும் தொண்டர்களையும் எப்படி தயார்படுத்துவது என்பதில் தயக்கம் நிலவுவதாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
'விஜய் சுற்றுப்பயணம் சென்று வந்த பின்னரே எதையும் உறுதியாக கூற முடியும்' என்றனர்.
- நமது நிருபர் -