பயணிகள் எதிர்பார்ப்பு *ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுமா *ஆன்மிக சுற்றுலா தளத்திற்கு முக்கியத்துவம் தரப்படுமா
ராமநாதபுரம்,: மீட்டர் கேஜ் ரயில் பாதையாக இருந்த போது ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட ரயில்கள் அகலப்பாதையான பின் நிறுத்தப்பட்டதால் ஆன்மிக சுற்றுலா தலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ராமேஸ்வரம் உலக புகழ்பெற்ற ஆன்மிக தலம். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை, தேவிபட்டினம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கொண்டுள்ள பகுதியாகும்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் அகலப்பாதையாக மாற்றம் செய்வதற்காக நிறுத்தப்பட்டன. அதன் பிறகு இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்படாமல் உள்ளது. அகலப்பாதையாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இன்று வரை பழயை ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் தரப்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தினருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்று வரை இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட ரயில் இதுவரை இயக்கப்படாமல் உள்ளது. ராமேஸ்வரத்திற்கு காலை, இரவு இயக்கப்பட்ட பாலக்காடு ரயிலும் மீண்டும் இயக்கப்படவில்லை.
புனலுார்-மதுரைக்கு இயக்கப்படும் ரயில் மதுரைக்கு காலை 5:00 மணிக்கு வந்து இரவு 11:45 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் இது மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் பயனடைவார்கள்.
அதே போல் மதுரையில் இருந்து குருவாயூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் கேரள பயணிகளுக்கும், தமிழக பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதே போன்று வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரயில்களை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் சுற்றுலா பயணிகள் பயனடைவார்கள்.
தற்போது ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். தற்போது புதியதாக அமைக்கப்பட்ட பாம்பன் பாலம் திறக்கப்படவுள்ளதால் புதிய ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது. *மாதவன், வழக்கறிஞர் சங்க துணைத்தலைவர், ராமநாதபுரம்: மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் அகலப்பாதை ஆக்கப்பட்ட பின் தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்கவில்லை. புதிய ரயில்களான குருவாயூர் --மதுரை ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும்.
புனலுாரில் இருந்து வரும் ரயில் வீணாக மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதால் அதனை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இது போன்று ரயில்களை இயக்கும் போது சுற்றுலாப் பயணிகள் பயனடைவார்கள் என்றார்.
------------