அடுக்குமாடி குடியிருப்பு ஓட்டு வங்கி: கட்சிகள் அள்ளுமா?
வீடில்லாத, வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள்; ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஓடை புறம்போக்கு, நீர்நிலையோரம் வசிக்கும் மக்களுக்கு, மாற்றிடம் வழங்கி, சொந்த குடியிருப்பை ஏற்படுத்திக் கொடுத்து கொண்டிருக்கிறது தமிழக அரசின், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்.
திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 15 இடங்களில், நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதில் அவிநாசி, பூண்டி, திருப்பூர் நெருப்பெரிச்சல், வீரபாண்டி உள்ளிட்ட, 8 இடங்களில், 5,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகள் வசம் வீடுகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன. அதிகபட்சம், திருப்பூர் திருக்குமரன் நகரில், 1,248 வீடுகள், வீரபாண்டியில், 1,280 வீடுகள் உள்ளன.
பல்லடம், பொங்கலுார், பெருந்தொழுவு, செட்டிபாளையம், அன்னுார், பொங்கலுார் உள்ளிட்ட, 7 இடங்களில், 3,000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் மட்டும் குறைந்தது, 8,000 குடும்பத்தினர் வசிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
ஒரு குடும்பத்துக்கு குறைந்தது, 3 பேர் என்றாலும், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளாக மாறுகின்றனர்.
திருக்குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராம்குமார் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை, கணிசமான ஓட்டுகளை, அரசியல் கட்சிகள் பெற முடியும். நிறைய பேர் தங்கள் முகவரி மாற்றம் செய்யாமல் உள்ளனர். அவர்கள் முகவரி மாற்றத்தை பதிவு செய், இடம் மாறியதற்கான ஆவணம் தேவைப்படுகிறது.
தற்போது, அவர்கள் ஏற்கனவே வசித்த இடங்களில் ஓட்டுச்சாவடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடந்து வரும் போதிலும், வயதான வர்கள், கர்ப்பிணிகள், சற்று தொலைவில் உள்ள அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல தயங்குகின்றனர்.
எனவே குடியிருப்பு பகுதியிலேயே, ஒரு விடுமுறை நாளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடத்தினால், பலரும் தங்கள் முகவரியை மாற்றம் செய்து கொள்ள வசதியாக இருக்கும். இந்த யோசனையை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.