சொத்து வரிக்காக கம்யூ., ஆர்ப்பாட்டம் இரட்டை வேடம் என்கிறது அ.தி.மு.க.,

திருப்பூர்: 'திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு தொடர்பான விவகாரத்தில், கம்யூ., கட்சி இரட்டை வேடம் போடுகிறது' என, அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியிருக்கிறது.

மாநிலத்தில் சொத்து வரி உயர்வு; குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்தாவிட்டால், ஒரு சதவீதம் அபராத வரி; தொழில் வரி; தொழில் உரிமக்கட்டணம்; கட்டட அனுமதி கட்டணம்; குப்பை அபராதம்; கொசு வளர்ப்பு அபராதம் என அத்தனை கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, இந்த வரி உயர்வு தொழில் துறையினர் உட்பட சாதாரண, சாமானிய மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்ற புகார் எழுந்திருக்கிறது. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

திருப்பூர், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி கூறியதாவது:

சிறு, குறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் வரி உயர்வுக்கு, அ.தி.மு.க.,வின், 17 கவுன்சிலர்களும், மன்றக்கூட்டத்தில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். வரலாறு காணாத வரி உயர்வு செய்யப்பட்டிருக்கிறது. வரி உயர்வை மறுபரிசீலனை செய்யக் கோரி, மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளோம்.

ஆனால், கம்யூ., கட்சியினர் மன்றத்துக்குள், வரி உயர்வு தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, வெளியில் வந்து, வரி உயர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அக்கட்சியினர் இரட்டை வேடம் போடுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement