கபடியில் கலக்கிய திருப்பூர் அணி வெற்றிக்கு வித்திட்ட கதிஜாபீவி
மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பில், திருவண்ணாமலையில் நடந்த மாநில ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில், சிவகங்கை, திருவண்ணாமலை, திருவாரூர் அணிகளை வென்று காலிறுதிக்குள் திருப்பூர் சப் ஜூனியர் பெண்கள் அணி நுழைந்தது.
காலிறுதியில் திருச்சி அணியை அசத்தலாக வென்ற திருப்பூர் அணி, அரையிறுதியில் பலம் வாய்ந்த ஈரோடு அணியுடன் மோதி, 22 - 51 என தோல்வியை தழுவி மூன்றாமிடம் பெற்றது. முதலிடத்தை சென்னை அணியும், இரண்டாமிடத்தை ஈரோடு அணியும் கைப்பற்றின.
இவ்வாறு திருப்பூர் அணி வெல்வது இதுவே முதல் முறை என்பதால், மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் உட்பட அனைவரும் மனதார பாராட்டியுள்ளனர்.
அணி வெற்றிப்பாதைக்கு முக்கிய காரணமாக வித்திட்டவர் அணியின் கேப்டன், கதிஜாபீவி.
''பொள்ளாச்சி, ஆனைமலை, வி.ஆர்., திருமலைச்சாமி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கபடி விளையாட துவங்கினேன். பள்ளி படிப்பு முடிக்கும் முன்பே, மாநில போட்டிகளில் பங்கேற்றதால், கல்லுாரியில் இணைந்தவுடன் அகில இந்திய சப்-ஜூனியர் போட்டியில் கல்லுாரி அணி சார்பில் விளையாட முடிந்தது.
கபடி அணியை திறமையானதாக உருவாக்க ஒற்றுமை, புரிந்து கொள்ளுதல், சகிப்பு தன்மை அவசியம். கபடி போட்டியில் எந்த நேரத்திலும், தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; தடுமாற கூடாது என்பதை என் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார், கற்றுக்கொடுத்தார். இன்று வரை அவரது வழிகாட்டுதல்களில் பல போட்டிகளில் பங்கேற்று வருகிறேன்.
நான் பள்ளியில் படிக்கும் போது எனக்கு சீனியராக கபடி விளையாடி இரண்டு அக்காக்கள்; தற்போது, போலீஸ் பணியில் சேர்ந்து, போலீஸ் டீமுக்கு கபடி விளையாடி வருகிறார்கள். அவர்களை பார்த்துதான் எனக்கு கபடி விளையாடும் ஆசை வந்தது.
கல்லுாரி அணிகளுக்கு இடையிலான கபடி, பல்கலை அளவிலான கபடி, ஆல்-இந்திய கபடி போட்டி எனக்கு பெரும் அனுபவத்தை தந்தது. தொடர் துவங்கியது முதலே விடாமுயற்சி, பயிற்சியில் இருந்தோம்.
அதிக பாயின்ட்களை குவிக்க போராடிய போது, ஈரோடு அணியுடனான போட்டியில் சிறு தவறுகள் நேர்ந்தது. அடுத்த முறை திருத்திக்கொண்டு நிச்சயம் மாநிலத்தில் முதலிடம் பெறுவோம்,'' என்கிறார் கதிஜாபீவி நம்பிக்கை தளராமல்.
அவர் தற்போது, கோபி, பி.கே.ஆர்., கலை அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், மூன்றாம் ஆண்டு படிக்கிறார்.