மாநில தடகள போட்டியில் 14 பதக்கம் அள்ளிய திருப்பூர்

திருப்பூர்: ஈரோட்டில் நடந்த மாநில தடகள போட்டியில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் இரண்டு தங்கம், உட்பட, 14 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

ஈரோட்டில் நவ., 6 முதல், 8ம் தேதி மாணவருக்கும், 9 முதல், 11 வரை மாணவியருக்கு, மாநில தடகள போட்டி நடந்தது. திருப்பூர் மாவட்ட தடகள போட்டியில் அசத்திய, 70க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் மாநில போட்டியில் பங்கேற்றனர்.

உடுமலை ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர் இளமுகில், 80 மீ., தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல் இரண்டிலும் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்ட மாணவ, மாணவியர் இரண்டு தங்கம், உட்பட, 14 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.

மாணவியர் பிரிவு



பதினான்கு வயது, 80 மீ., தடை தாண்டும் ஓட்டம் வர்ஷிகா (ஜெய்வாபாய் பள்ளி) இரண்டாமிடம், வட்டு எறிதல் சாலேமி (பல்லடம், ராஜா இன்டர்நேஷனல் பள்ளி) மூன்றாமிடம். 400 மீ., தொடர் ஓட்டத்தில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் சைனி, வர்ஷிகா, நைனிகா, ஜெனிதா மூன்றாமிடம்.

19 வயது பிரிவு, 400 மீ., 1600 மீ., இரண்டு தொடர் ஓட்டத்திலும் அம்மாபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளி அசத்தியது. இப்பள்ளி மாணவியர் மித்ரா, பவதாரணி, ஹர்ஷா, கவின்ரா 400 மீட்டரில் மூன்றாமிடம்; 1600 மீட்டரில் இரண்டாமிடம் பெற்று பாராட்டு பெற்றனர்.

மாணவர் பிரிவு



14 வயது, 100 மீ., ஓட்டத்தில், முகமது பைசல் (எஸ்.கே.பி., பள்ளி, உடுமலை) முதலிடம்; இம்மாணவர் 200 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார். 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், இளமுகில் (ஆக்ஸ்போர்ட் மெட்ரிக், உடுமலை) முதலிடம்.

இம்மாணவர் நீளம் தாண்டுதலிலும் முதலிடம் பெற்று, அசத்தியுள்ளார். 17 வயது பிரிவில், முகமது சல்மான் (பிரண்ட்லைன் மெட்ரிக் பள்ளி, திருப்பூர்) மூன்றாமிடம்; இம்மாணவர், 200 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம். 19 வயது, 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பரத் (சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி) இரண்டாமிடம். 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் யுகேஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, இடுவம்பாளையம்) மூன்றாமிடம். விஜயாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், மணிகண்டன், 19 வயது, 110 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம்.

மாநில தடகள போட்டியில், தொடர் ஓட்டம் தவிர பிற போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்றவர்கள், விரைவில் நடக்கவுள்ள எஸ்.ஜி.எப்.ஐ., தேசிய தடகள போட்டியில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் உதயகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

Advertisement