மதுக்கடை பார் அகற்ற வேண்டும் ஆவேசமடைந்த மக்கள் மறியல்

திருப்பூர்: மங்கலம் ரோட்டில் மதுக்கடை பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர், மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப் அருகே, மதுக்கடை பார் செயல்படுகிறது. இங்கு மது அருந்த வரும் 'குடி'மகன்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது; வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது; பஸ் ஸ்டாப் மற்றும் கடை வீதி என்பதால் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை ஏற்படுகிறது என அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், இதை மேலும் விரிவுபடுத்தும் வகையில், கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் நேற்று இரவு, மங்கலம் ரோடு, பழக்குடோன் பஸ் ஸ்டாப் அருகே திடீரென திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த சென்ட்ரல் போலீசார் மறியலில் ஈடுபட்டோரை அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சு நடத்திய போலீசார் இதுகுறித்து கலெக்டரிடம் சென்று மனு அளித்து தீர்வு காணுங்கள் என்று அறிவுறுத்தினர்.

பொதுமக்கள் கூறுகையில், 'திங்கட்கழிமை கலெக்டரை மீண்டும் சந்தித்து இது குறித்து வலியுறுத்தி மனு அளிக்கப்படும். அன்று மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மேலும் தீவிரமாகும்,' என்றனர்.

Advertisement