வாழ்க்கை நெறிமுறை போதிக்கும் மன்றம்: சிறுவர்களை சாதிக்க வைக்கும் முற்றம்
சிறார் பருவம் என்பது, சிற்பி ஒருவர் சிலை ஒன்றை செதுக்குவதற்கு சமம். பெற்றோர், சுற்றத்தார், நாம் சந்திக்க கூடிய மனிதர்கள், நிகழ்வுகள் என, இவை அனைத்தையும் சிறார் பருவத்தை சந்தோஷமாகவும் மாற்றும் சோகத்திலும் தள்ளும். இந்த பருவத்தில் பெற்றோர் கவனிப்பை மீறி வழிமாறி செல்லகூடிய சிறார்களின் வாழ்க்கை இறுதியில் கேள்விகுறியாகி விடும் சூழலும் உள்ளது.
இச்சூழலில், திருப்பூர் மாநகர போலீசார் சார்பில், குழந்தைகள் தினத்தையொட்டி மாநகரில் ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் ஒன்றிரண்டு சிறுவர், சிறுமியர் மன்றங்களை துவக்க போலீஸ் கமிஷனர் லட்சுமி நடவடிக்கை எடுத்தார். ஒவ்வொரு பகுதியில், 50 முதல், 100 சிறுவர், சிறுமியரை உறுப்பினர்களாக கொண்டு மன்றங்களை போலீசார் துவக்கியுள்ளனர். அந்த மன்றத்தில் அவர்களை நல்வழிப்படுத்தி, தேவையற்ற எண்ணங்கள் தோன்றுவதை தவிர்க்கும் வகையில், உள்விளையாட்டு, வெளி விளையாட்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, அன்றாடம் பள்ளி முடிந்தவுடன் வாழ்க்கை நெறிமுறைகள், போக்குவரத்து விதிமுறைகள் பற்றியும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கியுள்ளனர். விளையாட்டு போட்டிகள், புத்தக வாசிப்பு, ஆங்கில பயிற்சி வகுப்பு நடத்த துவங்கி உள்ளனர். இது பெயரளவுக்கு இயங்காமல், சிறுவர், சிறுமியர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்ட கூடிய வகையில் இந்த மன்றங்கள் இயங்க வேண்டும் என்பது கமிஷனரின் உத்தரவாக உள்ளது.
திருப்பூர் வடக்கு போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா கூறுகையில், ''மாநகரில் உள்ள ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் சிறுவர், சிறுமியர் மன்றம் துவங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சிறார்கள் பயனடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளது. வாழ்க்கை நெறிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு, பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. இவை அனைத்தும், தவறான வழியில் செல்லாமல் தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்,'' என்றார்.
மருத்துவ முகாம்
மன்றங்களில் உறுப்பினர்களாக உள்ள சிறுவர், சிறுமியருக்கு மருத்துவ முகாம் மாநகரில், இரண்டு இடங்களில் நடத்தப்பட்டது. அதில், மாநகர போலீசார், ரேவதி மெடிக்கல் சென்டர் மற்றும் ஏ.எம்.சி., மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாம் நடந்தது. வடக்கு, தெற்கு பகுதி மன்றங்களை சேர்ந்த, 500 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். அவர்களுக்கு குழந்தைகள் நலம், பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பரிசோதனை செய்யப்பட்டது.